Thursday, April 28, 2005

The Pianist

The Pianist
அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: பாஸ்டன் பாலா


என்னுடைய குழந்தைக்காக '·பைண்டிங் நீமோ' எடுக்கலாமா அல்லது
காதரின் ஜீடா ஜோன்சுக்காக 'சிகாகோ' எடுக்கலாமா என்று யோசித்த
போது கையில் சிக்கிய படம்தான் 'தி பியானிஸ்ட்'. எங்கோ கேள்விப்பட்ட
பெயராக இருக்கிறதே என்று பின்பக்கம் திருப்பி கதை என்ன என்று
பார்த்தால் 'ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்' போன்ற யூதர்களின் கொடுமை குறித்த படம்
என்று தெரிந்தது. அதை விட எடுக்கத் தூண்டியது 2002-ஆம் ஆண்டின் மூன்று
முக்கிய ஆஸ்கார் விருதுகளைப் பெற்றிருந்தது. சிறந்த இயக்குநர், சிறந்த
நடிகர், சிறந்த திரைக்கதை (ஏற்கனவே வெளியான புத்தகத்தை அடிப்படையாகக்
கொண்டது) என மிரட்டியது.

கதாநாயகன் ஏட்ரியன் ப்ரோடியை(Adrien Brody) இதற்கு முன் நான் வேறு படத்தில்
பார்த்தது இல்லை. அது படத்தோடு நகர்வதற்கு மிகவும் உதவியது. போலந்து ரேடியோவில்
ஸ்பில்மான் பியானோ வாசிக்கும் காட்சியுடன் படம் துவங்குகிறது. ஜெர்மனியின்
குண்டுகள் வானொலி நிலையத்தைத்தாக்கி, அவரை இருக்கையை விட்டுத் தூக்கியெறியப்
படும்வரை அலட்டிக் கொள்ளாமல் பியானோவை வாசிக்கிறார்.

நாஜியின் அடக்குமுறையால் ஊரிலிருந்து ஒதுக்கப்பட்ட இடத்துக்கு (ghetto) இவரின்
பணக்கார குடும்பமும் தள்ளப்படுகிறது. மற்ற யூதர்களுடன் நெருக்கியடிக்கும் ஒண்டுக்
குடித்தன வாழ்க்கை. குப்பத்து ராஜாவாக, யூதர் ஹோட்டலின் பியானோ வாசிப்பாளராகிறார்
ஹீரோ. நாஜிகளால் அடக்கப்பட்டும், எதுவுமே மாறாத மாதிரி அடக்குமுறைக்கு அடிபணியும்
யூதர் கூட்டத்தைக் காண்கிறார். கள்ளக்கடத்தல் செய்து பெரும்பணம் சேர்ப்பவர்களையும்,
நாஜிகளுடன் சேர்ந்து யூதர்களை மேய்க்கும் காவலர்களையும், மிதிக்கப்பட்டாலும் கனவான்
போல காட்சியளிக்க விரும்புவர்களையும் சலனமின்றி பியானோ வாசிப்பின் ஊடே பார்க்கலாம்.

போராளியாகி நாஜிகளை எதிர்க்க விரும்பும் ஸ்பில்மானின் தம்பி, யூதர்களின் போலீஸிடம்
மாட்டிக் கொள்கிறான். போலீஸில் இருக்கும் தன்னுடைய சக யூத நலம்விரும்பியிடம் போராடி
அவனை மீட்டெடுக்கிறார். அதே நலம்விரும்பியின் கடைசி நிமிட செயலால்,
உயிரும் பிழைக்கிறார். அவரைப் போல் கொடுத்து வைக்காத குடும்பத்தினர் அனைவரும்
நாஜியின் கொலை ரயிலில் ஏறி இறக்கின்றனர். கொஞ்ச நாள் செங்கல் தூக்கும் வேலை,
கொஞ்ச நாள் கணக்குப் பிள்ளை வேலை என்று நாஜி அடிமைத்தனம் செய்கிறார். அங்கிருந்து
தப்பித்துச் சென்று, கலையுலக நண்பர்களின் உதவியோடு வீடு வீடாக பதுங்கி ஹவுஸ் அரெஸ்ட்டான இருப்பு.

ஸ்பில்மான் தன் வீட்டு ஜன்னல் வழியாக யூதர்களின் எழுச்சி, போலந்து நாட்டு மக்களின்
கலவரமும் வீழ்ச்சியும், தன் சொந்த யூதர் இனம் ஒன்று விடாமல் அழிக்கப்படுவது, என
சரித்திரம் பதிவாவதை பசியுடன், மழிக்கப் படாத தாடியுடன், இசை உயிரும் இல்லாமல்,
அதிர்ந்து நடக்காமல், பாத்திர சப்தங்களும் இத்யாதி ஓசைகளும் செய்யாமல்
பார்வையாளராக மட்டும் நேரங்கடத்துகிறார்.

போலந்து நண்பர்களும் இறந்துவிட, போலந்தே அழிந்துவிட்ட தோற்றம் தர, ஸ்பில்மான்
நாஜிகளின் தேடலில் இருந்து தப்பித்து இருக்கையில், ஒரு நாள் மாட்டிக் கொள்கிறார்.
அப்பொழுது தற்காத்துக்கொள்ள வாசித்த பியானோவின் இசையில் சொக்கிப் போகும் ஜெர்மானிய
ஜெனரல், ஸ்பில்மானுக்கு உணவோடு உடையும் கொடுக்கிறார். ரஷியா
அவரையும் போலந்தையும் மீட்டெடுக்கும் வரை பாதுகாக்கிறார்.

படத்தின் கதை போரடிப்பது போல் தோன்றினால், படத்தை பார்த்த பிறகு கருத்தை மாற்றிக்
கொள்வீர்கள். மூன்று மணி நேர படத்தில் பல காட்சிகளாக மௌனம் மட்டுமே. உறைய
வைக்கும் காட்சிகளைக் கூட ரொம்ப 'பில்ட்-அப்', அதிரடி இசை என்று மிரட்டாமல்
மிரள வைத்துக் கொண்டு நகர்த்தும் திரைக்கதை.

காட்டாக ghetto-வுக்கு வந்தபிறகு இரவு உணவு அருந்திக் கொண்டு ஸ்பில்மானின்
குடும்பத்தினர் அரட்டையடிக்கின்றனர். ஜீப் வரும் சத்தம் கேட்டு, சுற்று வட்டார வீடுகளின்
விளக்குகள் அவசரமாக அணைக்கப்படுகிறது. எதிர் வீட்டு ·ப்ளாட் தட்டப்பட்டு, உள்ளே
நாஜிகள் நுழைகிறார்கள். சாப்பாட்டு மேஜையில் இருக்கும் அனைவரையும் எழுந்திருக்குமாறு
உத்தரவு. ஒருவர் மட்டும் உட்கார்ந்து கொண்டேயிருக்க, அவரை குண்டுகட்டாக தூக்கி
மூன்றாம் மாடி பால்கனி வழியே விசிறுகிறார்கள். நாஜிகளின் கையில் அப்போதுதான்
அவருடைய சக்கர நாற்காலி, நமக்குக் காட்டப்படுகிறது. தொடர்ந்து அந்தக் குடும்பத்தினர்
அனைவரும் வெளியில் கொணரப்பட்டு மிஷின் கன் அபிஷேகிக்கப் படுகிறார்கள்.
சத்தமில்லாமல் அடுத்த காட்சிக்கு கதை நகர்ந்து விடுகிறது.

முதல் ஒரு மணி நேரத்தில், என்ன நடக்கப் போகிறது என்றறியா யூதர்களின் பேதமையும்,
நாஜிகளின் எல்லைதாண்டிய அடக்குமுறையும், வளரும் ஆதிக்க வெறியும், அவமானப்படுத்தும்
மனப்பான்மையும், போலந்து மக்களின் 'நம் தலை தப்பித்தது தம்பிரான்
புண்ணியம்' என்னும் விட்டேத்தி மனப்பான்மையும் காணலாம். யூதர்களே ஒருவருக்கொருவர்
எட்டப்பனாய் காலை வாறிவிட்டுக் கொள்வதும், செய்வதறியாமல் ஆட்டு மந்தை கூட்டமாக
வெட்டி வீழ்த்தப்படுவதும், மூன்றாம் மனிதராக வாளாவிருப்பதும் பார்க்கலாம். திரைக்கதை
அமைதியாக நகர்ந்தாலும், நம் மனம் பதைபதைக்கும்.

ஹீரோவாக என்னை நினைத்து பார்ப்பது வழக்கம். ஜேம்ஸ் பாண்ட்/ரஜினி ரசிகனான எனக்கு
ஸ்பில்மானின் செய்கைகள் ஆச்சரியத்தைத் தந்தது. அவர் களத்தில் இறங்கவும் இல்லை; தன்
இனம் அழியும் போது துப்பாக்கி எடுக்கவும் இல்லை; நாஜிகள் வழிமறித்தபோது
புத்திசாலித்தனமான சூழ்ச்சிகள் செய்து வீழ்த்தவும் இல்லை. மாறாக ஓடினார்; தப்பித்துப்
போனார்; ரகசியமாக ஒளிந்தார்; திருடினார்; பேசாமடந்தையாக இருந்தார். ஒரு சாதாரண நடுத்தர வர்க்க
தமிழ்க்குடிமகன் என்றாவது இந்தியா ஒளிரும்; நல்ல காலம் பிறக்கும்; நமக்கெதுக்கு வம்பு
என்று அடங்கி செல்வதைப் போல். ஒரு நாயகன் இப்படி வாழ்ந்து, தன்னை மட்டும்
காப்பாற்றிக் கொள்வார் என்பது எனக்கு ஆச்சரியமான விஷயம்.

அளவாக வாழ்ந்து, ஸ்பில்மானாகவே தோற்றம் செய்கிறார், ஏட்ரியன் ப்ரோடி என்னும் நடிகர்.
தண்ணீரில்லாமல் தவிக்கும்போது, பலநாள் பேசாமல் வாய் குளறி மொழி தடுமாறும்போது, அனுபவித்து
பியானோ இசைக்கும்போது, பியானோ இருந்தும் இசைக்க முடியாத தனிமை நாட்களைக் கடத்தும்போது,
எட்டாக்காதலான போலந்து காதலியுடன் பேசும்போது என்று மிகை
எளிதில் காட்ட வாய்ப்புகள் இருந்தும் அடங்கி இருக்கும் சாதாரணனை கண்முன்னே
நிறுத்திவிடுகிறார். படத்தின் பிற்பகுதிக்காக தன்னுடைய 73 கிலோ எடையை, பதினான்கு
கிலோ குறைத்துக் கொண்டார். படத்தில் காட்டப்படும் தனிமையை ஒழுங்காக சித்தரிக்க
வேண்டும் என்பதற்காக, தன்னுடைய கார், வீடு, செல்பேசி எல்லாவற்றையும் துறந்து
டிவி கூட பார்க்காமல் இருந்தாராம்!

படத்தில் எனக்கு சில குறைகளும் தோன்றின. ஏகப்பட்ட துணை நடிகர்கள் வந்து போகிறார்கள்.
முன்னாள் காதலியும், பிற்பகுதியில் அவருக்கு ஆதரவு தரும் போலந்து பாடகியும் ஒருவரோ எனக்
குழப்புகிறார்கள். சரித்திரம் ஜன்னல் வழியே வழிவதாலோ, என்னவோ,
செரிக்கும் வேகத்தில் செல்லவில்லை. மற்றபடி கொஞ்சம் ஸ்லோவான படத்தில், இந்தப் பதிவுகள்
பறக்கடிக்கப் படுகின்றன. இடிபாடுகள் நடுவே இருக்கும் ஊரில், சிதிலமடைந்த
வீட்டில், ஸ்பில்மான் வாசித்து ஜெர்மானிய ஜெனரல் ரசிக்க ஒரு பியானோ மட்டும்
மாசுபடாமல், தூசுபடாமல், அலுங்காமல், குலுங்காமல் தப்பித்தது எப்படி?!

கடைசியாக படத்தின் இயக்குநர் ரோமன் பொலன்ஸ்கி குறித்தும் ஒரு பதிவு. ஆஸ்கார்
கிடைத்தாலும் அவர் நேரில் வாங்க அமெரிக்காவுக்கு வர இயல்வில்லை. ஏன்?
அமெரிக்காவினுள் நுழைந்தால், அவருக்கு பிடி வாரண்ட் இருக்கிறது. பச்சிளம் பாலகியை
போதை மருந்துக்கு உள்ளாக்கி வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இருந்து நாடோடியவர்.
தப்பித்தோடிய ஒரு கொடூர குற்றவாளியிடம் இருந்து இப்படிபட்ட மென்மையான படைப்பு!

தன்னுடைய இளமைக்காலங்களில் பொலன்ஸ்கி நாஜிகளிடம் அடிபட்டவர். ஸ்பில்மான்
மாதிரியே கடைசி நிமிடத்தில் உயிர் பிழைத்தவர். போலந்தின் தெருக்களில் அலைந்து
திரிந்தவர். சொந்த அனுபவங்கள் நிஜத்தை நிலைநிறுத்த நிச்சயம் உதவியிருக்கிறது.

நிஜமாகவே இவற்றை வாழ்ந்த ஸ்பில்ஸ்மான் தன்னுடைய வரலாற்றை இரண்டாம்
உலக யுத்தம் முடிந்தவுடனேயே (45-46-இல்) புத்தகமாக எழுதி விட்டார். புத்தகத்தை
படித்த ருஷியர்களுக்குப் பிடிக்காத்தால், வெளிவரவில்லை. ஒரு நல்ல ஜெர்மானிய கார்னல் (நாஜி)
இருந்தான் என்று ஸ்பில்மான் சொன்னதுதான் தணிக்கைக்கு காரணம். சோவியத்தின்
வீழ்ச்சிக்குப் பிறகு, தொண்ணூறுகளின் இறுதியில் பேப்பரை சென்றடைந்து மக்களை தொட்டது,
புத்தகம். வலைப்பதிவுகள் போல், முன்னும் பின்னும் சென்ற குறிப்புகளை கோர்வையாக்கி,
விட்ட இடங்களை நிரப்பி, ஸ்பில்மானோடு உறவாடியவர்களைப்
பேசி, திரைக்கதை தயாராக்கியுள்ளார்கள்.

கலை, ஆடையமைப்பு, காலத்தால் அழிந்துபோன நகரங்களை நம் முன்னே கொண்டுவந்தது,
இடிபாடுகளை பிரும்மாண்டமாக்காமல் உருகவைத்தது என்று அடுக்கிக் கொண்டே
பாராட்டும் இந்தப் படத்தை பார்த்தவுடன் உதித்த ஒரு எண்ணம்...

இலங்கையில் நடந்த இனப்போரை மூன்றாம் மனிதப் பார்வையில், உணர்ச்சி வசப்படாமல்,
சத்தமாகப் பேசாமல், ரத்தம் கொதிப்படையும் வசனங்கள் இல்லாமல் சரித்திரப் பதிவாக
எப்போது யார் திரைப்படம் கொடுக்கப் போகிறார்கள்? செய்ய விடுவார்களா?

- பாஸ்டன் பாலாஜி
நன்றி: தமிழோவியம்

போலன்ஸ்கி ஏன் அமெரிக்காவை விட்டு ஓடிப்போய் ஒளிந்தார் என்று விலாவாரியாக அறிந்துகொள்ள இங்கே சொடுக்கவும். பல இணையத்தளங்கள் ஏட்ரியன் ப்ரோடி செய்துகொண்ட பழக்கவழக்க மற்றும் உருவ மாற்றங்களை விவரிக்கிறது. தி பியானிஸ்ட் படத்தின் அதிகாரபூர்வ வலைப்பக்கத்தில் நிஜ ஸ்பில்மானை சிறுகுறிப்பிட்டிருக்கிறார்கள். மெய்யாலுமே ஸ்பில்ஸ்மானின் பியானோ இசையை அனுபவிக்கவும் முடியும். வார்சா ghetto புரட்சியை சரித்திர பிண்ணனியில் ஆராய இந்த வலைத்தளம் உதவியது. அப்பொழுது எடுத்த நிழல் படங்களையும் பார்க்க முடிகிறது.

This page is powered by Blogger. Isn't yours?